• Sun. Oct 12th, 2025

எந்தவொரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை தடை செய்ய நேரிடும்

Byadmin

Jun 1, 2018

(எந்தவொரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை தடை செய்ய நேரிடும்)

சமூக வலைதளங்களை அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த தவறினால் எந்த ஒரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை  தடை செய்ய நேரிடும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்கா அதிகாரிகளை இலங்கை வரவழைத்து இலங்கையில் சமூகவலைகள் ஊடாக நடக்கும் குற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்குமாறு கூறியதாகவும் சமூக வலைதளங்களை அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த தவறினால் எந்த ஒரு எதிர்ப்பையும் மீறி அவற்றை நாட்டில் தடை செய்ய நேரிடும்   குறிப்பிட்டுள்ளார்.
வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (31) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நீதித்துறையினர் மட்டுமன்றி சகல துறையினரும் திருப்தியாகவும் சுதந்திரமான சூழலிலும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதித்துறையிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஊழியர்கள் முகங்கொடுத்திருக்கும் சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நீதிபதிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் குறித்து முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவர்களது நியாயமான மனக்குறைகளை முன்வைப்பதற்கு விசேட பிரிவொன்றை தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
சட்ட ஆட்சியை பலப்படுத்துவது ஒரு நாட்டில் சிறந்த பண்பாடான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முதன்மையான அடிப்படையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டில் சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துதல், சுதந்திரமான ஜனநாயக சமூகத்தையும் ஊழல் மோசடிகளற்ற சமூகத்தையும் கட்டியெழுப்புதல் என்பனவே 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்வதற்கான நோக்கங்களுள் முக்கியமாக இருந்ததாக ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் சிலர் எல்லை தாண்டிச் சென்று அனுபவிக்க முயற்சிக்கின்ற காரணத்தினால் பண்பாடான சமூகமொன்றிற்கு பொருத்தமில்லாத பல்வேறு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசி குற்றங்கள் குறித்து முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் மிகவும் கவலையளிப்பதாகவும் இந்த பாரதூரமான நிலைமை குறித்து அனைத்து துறைகளும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.
பாதாள உலகத்தினர் தலைதூக்கியிருப்பதாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அதற்கான முதன்மையான பொறுப்பு சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில் அத்துறையிலுள்ளவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், அவ்வாறல்லாதபோது அது குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நீதியமைச்சினால் நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளை அமைக்கும், திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வத்தளை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு 275 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இரண்டு மாடிகளைக்கொண்ட இந்த புதிய கட்டிடத் தொகுதி மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களை கொண்டுள்ளதுடன், நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ அறை, பதிவறை, சட்டத்தரணிகளுக்கான கடமை மற்றும் ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *