(மதுவில் மூழ்கி திருந்தியவர், நோன்புடன் பள்ளிவாசலில் வபாத் (இலங்கையில் உண்மைச் சம்பவம்)
மத்திய கொழும்பு, அவரது பிறப்பிடம். சாதாரண ஹோட்டல் நடத்துனர் அவர். அவர் வாழ்வில் மதுபானம் அருந்தாமல் பொழுது விடியாது; சூரியன் அஸ்தமிக்காது.
அந்தளவு போதைக்கு அடிமையானவர். வெள்ளிக் கிழமையில் மாத்திரம் பள்ளிவாசல் வருபவர்.
குடும்பத்தினர் அவரை பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. வீதியும் வீடும் அவருக்கு ஒன்றுதான். மதுபானத்தை கைவிட்டு தொழுகையின் பால் தொடர்ந்தும் அவருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தனர் சில சகோதரர்கள்.
இம்முறை -2018- ரமழானுக்கு சற்று முன்னர் அவர் சிந்திக்க ஆரம்பித்திருந்தார்.
அந்த சகோதரர்களின் அழைப்புக்கு பதில் கொடுத்தார்.
”நான் திருந்தி வாழப் போகிறேன். மதுபானத்தைக் கை விடுகிறேன்… நான் செய்த பாவங்களோ அதிகம். எனக்கெல்லாம் மன்னிப்பு கிடைக்குமா ஹஸரத்?” என்று நோன்பின் ஆரம்பத்தில் இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி அதிபர் எம்.இஸட்.எம். ஹுஸைன் மௌலவி அவர்களிடம் கேட்டிருக்கிறார் அவர்.
”ஆம்… நிச்சயமாக. அல்லாஹ் அடியார்களின் பாவங்களை மன்னிக்க காத்திருக்கின்றான்…” எனக் கூறி அவருக்காக துஆவும் செய்கிறார் ஹுஸைன் மௌலவி.
பள்ளிவாசல் வருகிறார். ஐவேளை தொழுகையில் ஈடுபடுகிறார். தனது பாவங்களை நினைத்து வருந்துகிறார் அந்த மனிதர். தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் சிலர் ஜமாஅத் செல்ல வருமாறு அவரை அழைக்கின்றனர்.
அழைப்பை ஏற்கிறார். கொழும்பு மாவட்டம் தாண்டி கொட்டாரமுல்லை எனும் ஊருக்கு ஜமாஅத்தில் செல்கிறார். பர்ளுகளுடன் சுன்னத்துகளையும் தொழுகிறார். தனது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுகிறார். பாவங்களை நினைத்து கண்ணீர் வடிக்கிறார். அழுது… அழுது… கையேந்துகிறார். பள்ளிவாசலில் அதான் சொல்ல விரும்புகிறார்… அதனையும் செய்து பார்த்தார்… தங்கியிருந்த பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குகிறார். பள்ளிவாசல் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார்.
நன்மைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உற்சாகமாக செயற்படுகிறார். அவசர அவசரமாகவும் ஈடுபடுகிறார்.
09.06.2018 அன்று 23ஆவது நோன்பையும் நோற்ற நிலையில் அன்றைய ஸுப்ஹு தொழுகைக்கான அதான் கூறும் பணியையும் செய்கிறார். ஸுப்ஹு தொழுதுவிட்டு பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்கிறார்…
பின்னர் ஹதீஸ் வாசிக்கும் மஜ்லிஸில் அமர்கிறார். அவரே முன்வந்து ஹதீஸ் கிரந்தத்தை வாசிக்கிறார். வாசித்துக் கொண்டிருந்தபோதே நெஞ்சில் வருத்தம். நெஞ்சைப் பொத்திப் பிடித்துக் கொண்டு சாய்கிறார்.
அது மாரடைப்பு…
அது மலகுல் மௌத்தின் வருகை…
நோன்பு நோற்ற நிலையில் பள்ளிவாசல் வளாகத்தில் ஹதீஸ் வாசிக்கும் மஜ்லிஸில் அன்னாரின் உயிர் பிரிகிறது, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா கொழும்புக்கு எடுத்து வரப்பட்டது. நல்லடக்கத்தில் திரளான மக்கள்.
அவருக்காக உயர்ந்தன நூற்றுக்கணக்கான கரங்கள்.
மதுபான போத்தலோடு… போதை நண்பர்களோடு… உலா வந்த அவரது இறுதி முடிவை நல்லதாக ஆக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அல்ஹம்து லில்லாஹ்.
அவரது சிந்தனை மாற்றத்திற்காக உழைத்த சகோதரர்களின் முயற்சிக்கு கூலி கொடுக்க இறைவனே போதுமானவன்!
ஷைத்தான் விலங்கிடப்பட்ட மாதத்தில் அந்த மனிதர் மதுபான விலங்கை தகர்த்தெறிந்திருக்கிறார்.
இறுதி முடிவு நல்லதாக அமைய வேண்டும். இறுதி மூச்சு ஈமானோட விடை பெற வேண்டும். அதற்காக நபியவர்கள் பிரார்த்தித்திருக்கிறார்கள்.
அந்தப் பிரார்த்தனை எப்போதும் எமது நாவில் நனைய வேண்டும்.
சகோதரர்களே! போதையில்… வேறு பெரும் பாவங்களில் மூழ்கியிருப்பவர்களை ஒதுக்க வேண்டாம்… ஓரங்கட்ட வேண்டாம்… ஓரக்கண் கொண்டு பார்க்க வேண்டாம்… தூற்ற வேண்டாம்… வெறுக்க வேண்டாம்…
அவர்களை அணுகுவோம்…. அழகிய முறையில் அழைப்போம்… திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்வோம்…
அவர்களுக்கும் இதயம் இருக்கிறது. அதில் எங்காவது ஒரு மூலையில் ஈரம் இருக்கிறது என்பதை உணர்வோம்.
நன்மைகளை ஏவுவோம். தீமைகளைத் தடுப்போம்.
அதுதானே எங்கள் பணி.
சுபசோபனம் சொல்வதும்… அழகிய மொழியில் அழைப்பதுமே எங்கள் பணி.
தீர்ப்புச் சொல்வது எங்கள் பணியல்லவே!
Jemsith Azeez