• Sun. Oct 12th, 2025

மனநோய் பற்றிய அறியாமை

Byadmin

Jun 16, 2018

(மனநோய் பற்றிய அறியாமை)

மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லிசூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரிய நம்பிக்கைகள் பல நிலவுகின்றன. வேரூன்றியிருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் மக்கள் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள், பேயோட்டிகள் இவர்களின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள்.

உளவியல் நிறுவனமொன்றில் 198 மனநோயாளிகளிடம் செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஒவ்வொருவரும் ஏறக்குறைய 15 முறை சாமியாரிடம் சென்றிருக்கின்ற னர். மதம் சார்ந்தவர்களின் உதவியை வேறு வழியின்றி அதிகம் நாடுவது ஏழைகளே என்ற விவரமும் இந்த ஆய்வில் தெரியவந்தது.

நம் நாட்டின் சுகாதார நிதிநிலை அறிக்கையில் 0.006 சதவீதம் நிதி தான் மனநலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. மனநல மருத்துவ நிலையங்களின் செலவுபற்றிய புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஒரு லட்சம் மக்களுக்கு 0.036 சதவீதம் என்ற அளவில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் உயர்கல்வி பெற்ற குடும்பத்தினர், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை இவற்றைக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் என்று தெரியவந்தது. கல்வியறிவற்றவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பேய், பிசாசு இவற்றைக் காரணமாகக் காட்டுகிறார்கள். மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.

மனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள், அறியாமை இவையே காரணம். ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் கண்டுபிடித்துத் தரமான சிகிச்சை அளிப்பதைத் தடுப்பதும் இவையே. மனநோய் ஓர் அவமானச் சின்னமாகக் கருதப்படுவதால், பல தருணங்களில் மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர். அதிலும் பெண் நோயாளிகள் இருந்தால் குடும்பங்கள் அவமானப்பட்டு அவர்களை மறைத்துவைக்கிறார்கள்.

மனநோய் சிகிச்சையில் முக்கியமான வி‌ஷயம் சில மாதங்கள் கழித்தே பலனை அறிய முடியும் என்பதால், மனநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து தொடர்ந்து வெகுநாட்களுக்கு, நாள் தவறாமல் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மிக வேகமாக பலனை எதிர்பார்க்கும் பலர், பாதியிலேயே சிகிச்சையைக் கைவிடுகின்றனர். குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும். நாம் எவ்வளவு பொறுமையோடு செயல்படுகிறோம் என்பதில்தான் பலன் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *