• Sun. Oct 12th, 2025

உரிமைகளை பறிக்காதீர்கள்

Byadmin

Jun 16, 2018

(உரிமைகளை பறிக்காதீர்கள்)

இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.
‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’. (குர்ஆன் 6 : 151) சிசுக்கொலை, கருக்கொலை இதன் மூலம் தடைசெய்யப்படுகிறது.
‘அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்’. (6 : 151) கொலை, கலவரங்கள், வன்முறை, பயங்கரவாதம் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துவது வரம்பு மீறிய செயலாகும்.
‘உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக, அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும், அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்’. (2 : 188)
‘உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள்’. (17 : 26)
‘இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்’. (49 : 11)
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்’. (49 : 12)
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறாத வரையிலும் நுழையாதீர்கள்’. (24 : 27)
ஒருவர் தாம் விரும்பும் மதத்தை, கொள்கைகளை பின்பற்ற உரிமை உடையவர் ஆவார். கொள்கைத் திணிப்பு உரிமை மீறலாகும். தமது கொள்கையை எடுத்துரைக்க மட்டுமே ஒருவருக்கு உரிமை உண்டு.
‘இது (குர்ஆன்) உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்’. (18 : 29)
உயிர், உடைமை, கண்ணியம், அந்தரங்கம், நம்பிக்கை ஆகியவை மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். இவற்றைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை. பறிப்பது வரம்பு மீறிய செயலாகும். மறுமையில் இவற்றிற்கும் தண்டனைகள் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *