• Sun. Oct 12th, 2025

நபிகள் நாயகத்தின் இறுதி ஹஜ்ஜுப் பயணமும் மக்களின் சந்தேகங்களும்

Byadmin

Jun 16, 2018

(நபிகள் நாயகத்தின் இறுதி ஹஜ்ஜுப் பயணமும் மக்களின் சந்தேகங்களும்)

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், ஆழ் மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர்.

‘என்னுடைய இறைவனிடத்திலிருந்து வந்த வானவர் ‘இந்த அபிவிருத்தி மிக்கப் பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!’ எனக் கட்டளையிட்டார்’ என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் நின்று கூறினார்கள்.

மதியவேளை தொஹ்ர் தொழுகைக்கு முன்பாக நபி (ஸல்) இஹ்ராமுக்காகக் குளித்து நறுமணத்தைத் தடவி, தொழுகையை நடத்தினார்கள். தொழுத இடத்திலிருந்தே ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்து நிறைவேற்றுவதாக நிய்யத் செய்து கொண்டு ‘தல்பியா’ கூறினார்கள். ஒட்டகத்தின் மீதேறியும் தல்பியா கூறினார்கள், வழிப் பிரயாணத்தில் தொடர்ச்சியாகத் தல்பியா கூறினார்கள். கிட்டத்தட்ட எட்டு நாட்களைக் கழித்துக் கஅபாவை வந்தடைந்தார்கள். தவாஃப் செய்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தார்கள். ஆனால், இஹ்ராமைக் களையவில்லை. ஏனெனில், நபி (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிறைவேற்றுவதற்காக, தங்களுடன் குர்பானி பிராணியையும் அழைத்து வந்திருந்தார்கள்.

குர்பானி பிராணியைத் தன்னுடன் கொண்டுவராத தோழர்களை உம்ரா முடித்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அதற்குத் தோழர்கள் தயங்கினர். அதைப் பார்த்து நபி (ஸல்) “நான் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பயணத்தை நாடினால் என்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டு வரமாட்டேன். என்னுடன் இப்போது குர்பானி பிராணி இல்லை என்றால் நானும் இஹ்ராமைக் களைந்திருப்பேன்.” என்று கூறினார்கள். அதன் பிறகே பிராணி கொண்டு வராத தோழர்கள் இஹ்ராமைக் களைந்தனர்.

மினாவில் தொஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அங்கு மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். ‘நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்’ என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்’ என்றார்.

அதற்கு நபியவர்கள் ‘பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!’ என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் ‘பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்’ என்றே பதிலளித்தார்கள். ஃபஜர் தொழுகைக்குப் பின் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின் அரஃபா நோக்கி பயணமானார்கள். அரஃபாவில் ஒரு கூடாரத்தில் தங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்டு ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நபி (ஸல்) உரையாற்றினார்கள்.

“மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது” என்று தமது உரையை ஆரம்பித்தார்கள்.

அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 2:25:1534, 1558, 1:3:83

-ஜெஸிலா பானு, துபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *