• Sat. Oct 11th, 2025

புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி”  – பிரதி அமைச்சர் பைசல் காசீம்

Byadmin

Jul 24, 2018
(“புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி”  – பிரதி அமைச்சர் பைசல் காசீம்)
புத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள  1200 கட்டிகள்கொண்ட ஆறு மாடிக்   கட்டடங்களைத்  தடுப்பதற்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சதி செய்கின்றார் என்று சுகாதார,போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
புத்தளம் தள வைத்தியசாலையில் இருக்கின்ற குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் நான் நான்கு தடவைகள் அங்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றேன். தாதிமார்கள் மற்றும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவியதை முதலாவது விஜயத்தின்போது  கண்டறிந்தேன்.அவற்றை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளோம்.
வைத்திய உபகரணங்களுக்கான தட்டுப்பாடும் இருந்தது.அதையும் ஓரளவு நிவர்த்தி செய்துள்ளோம்.அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத் திட்டங்களை வகுத்துள்ளோம்.
அதன்படி,ஆறு மாடிகள் கொண்ட நான்கு கட்டடங்களை அந்த வைத்தியசாலையில் அமைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.மூன்று மாடிகள்,நான்கு மாடிகள் என அமைத்தால்   சில வருடங்கள் கழித்து  இட நெருக்கடி ஏற்படுகின்றபோது அவற்றை இடிக்க வேண்டியேற்படும். இப்போதே ஆறு மாடிகளை அமைத்துவிட்டால் அவற்றை இடிக்க வேண்டி வராது.அதனாலேயே.நாம் எல்லா கட்டடங்களையும் ஆறு மாடிகள் கொண்டவையாக அமைக்கவுள்ளோம்.
எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியவாறு அனைத்துவிதமான மருத்துவ வசதிகளையும் கொண்ட -நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 1200 கட்டில்களுடன் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஆனால்,சில அமைச்சர்கள் இவ்வாறான சேவைகளை விரும்பவில்லை.நாம் இவற்றைக் கொண்டு அரசியல் செய்கிறோம் என்று கூறுகின்றனர்.எமது தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமை புத்தளத்துக்கு அழைத்துச் சென்று நாம் அரசியல் செய்கின்றோம் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூறி புலம்பியுள்ளார்.
இவரின் செயற்பாடு புத்தளம் மக்களுக்கு கிடைக்கவுள்ள இந்த வைத்தியசாலை கட்டடங்களை-நவீன மருத்துவ வசதிகளை தடுப்பதாகவே இருக்கின்றது.உண்மையில் இவர் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மக்களின் வயிற்றில் அடிக்கின்றார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்திருப்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான்.அவற்றை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல.
அந்த அமைச்சருக்கு கிடைத்திருக்கும் அமைச்சின் ஊடாக முடிந்தால் அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும்.நாம் அதைத் தடுக்கமாட்டோம்.அதைபோல் அவரும் எமது சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது.
மஹிந்தவின் ஆட்சியில் மஹிந்தவிடமும் பசிலிடமும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பற்றி குறை கூறித் திரிந்ததுபோல் இந்த அரசிடம் செய்ய முடியாது.அது இங்கு எடுபடாது.முடிந்தால் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.இல்லாவிட்டால் நாம் செய்வதைப் பார்த்துக்கொண்டு இருங்கள்.-எனத் தெரிவித்துள்ளார்.
-பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *