(கண்டியில் குர்பானை நிறைவேற்ற வேண்டாம், இறைச்சியும் கொண்டு வராதீர்கள்)
கண்டி நகர் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் இம்முறை உழ்ஹியா கடமையை கண்டி நகர் பகுதிக்கு வெளியே உள்ள பகுதிக்குச் சென்று நிறைவேற்றுமாறும் உழ்ஹியா இறைச்சியை கண்டி நகர எல்லைக்குள் எடுத்து வரவேண்டாம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கண்டி வருடாந்த எசல பெரஹரா வைபவம் நேற்று ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதால் கண்டி நகர எல்லைக்குள் மிருகங்கள் அறுப்பதும், வெளியிடங்களிலிருந்து இறைச்சி வகைகள் நகருக்குள் கொண்டு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. கண்டி நகர மற்றும் சூழவுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மை இனத்தின் நிகழ்வான எசல பெரஹராவுக்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும், தடை செய்யப்பட்டுள்ளவற்றை கண்டி நகருக்குள் மேற்கொள்ள வேண்டாமெனவும் ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கண்டி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவித் தலைவர் மௌலவி பஸ்ருல் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: உழ்ஹியா கடமையை நிறைவேற்றும் முஸ்லிம்கள் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக தேவையான அனுமதிப்பத்திரங்களை உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகளிலும், தனிப்பட்ட இடங்களிலும் மாடுகள் அறுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
-Vidivelli