(இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட அழகழகான பறவைகள் கட்டுநாயக்காவில் சிக்கியது)
உயிருடன் உள்ள 57 குருவிகளை, உரிய அனுமதியின்றி, விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவந்த இலங்கையர் ஒருவர், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து, நேற்று (23) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் – மாரவில பகுதியைச் சேர்ந்த மேற்படி நபர், செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 37 வயதுடையவர் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு 10.45 மணிக்கு, தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த ஸ்ரீ லங்கன் விமானச் சேவையைச் சேர்ந்த விமானத்தினூடாகவே, அவர் இந்தக் குருவிகளைக் கடத்தி வந்துள்ளார்.
அவர் கொண்டுவந்திருந்த பயணப் பொதிகளுக்கு, பிளாஸ்டிக்கிலான குருவிக் கூடுகளில் அடைக்கப்பட்ட நிலையிலேயே, இந்தக் குருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கூடுகளுக்குள், சன் கோனர் ரண குருவியொன்றும் பசுபிக் ரண குருவிகள் 20, டர்கசின் ரக குருவிகள் 02, ரெட் லோரி ரக குருவிகள் 12 மற்றம் கிரீன் ஷீக்ஸ் ரக குருவிகள் 22 என்பன காணப்பட்டதாக, விமான நிலைய சுங்கப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.