கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ தேர்தல்களை நடத்தியாக வேண்டும் என்கிறார் ஆணைக்குழு தலைவர் மஹிந்த
சகல மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் முதலில் சகல மாகாண சபைகளையும் கலைக்க வேண்டும்.
மாகாணசபை கால எல்லையை நீடிக்க முடியாது. அரசியல்வாதிகளின் தேவைக்காக மக்கள் ஆணையை மீறமுடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளை கலைத்து தேர்தலை நடத்தவேண்டிய காலம் வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சகல மாகாணசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மாகாணசபை தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்பட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கே மக்களால் மாகாணசபை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே ஒவ்வொரு மாகாணசபை தேர்தலும் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். சில மாகாணசபைகள் கலைக்கப்பட நீண்டகால அவகாசம் உள்ளது. எனினும் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகள் வரும் செப்டெம்பர் மாதத்துடன் கலைக்கப்பட வேண்டும். புதிதாக தேர்தலை நடத்த வேண்டும்.
ஆகவே அவ்வாறான நிலையில் சகல மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அனைத்து மாகாணசபைகளையும் உடனடியாக கலைக்க வேண்டும். கால நீடிப்பு வழங்குவது மக்கள் வரத்தை மீறும் செயற்பாடாகும்.
அரசியல்வாதிகளின் தேவைக்காக மக்கள் ஆணையை மீறி செயற்பட முடியாது.
உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாது விடுவது மக்களை ஆணையை மீறும் செயற்பாடாக அமைந்துவிடும். ஆகவே இப்போதும் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும்.
மாகாணசபை கால எல்லை முடிவடையும் நிலையில் முதல்வர் மற்றும் ஆளுநர் தீர்மானித்து மாகாணசபையை கலைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.