(உலகை உலுக்கிய ஆஷிபா கொலை… தீர்ப்பு வெளியானது)
காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிபாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி
கொலை செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா எனும் பகுதியில் 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிபா 4 நாட்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியது.
இச்சிறுமியின் சடலம் கடந்த வருடம் ஜனவரி 10 ஆம் திகதி கண்டுபிடிப்பட்டது.
பொலிஸாரின் தகவல்களின்படி,கத்துவாவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் சிறுமியை 4 நாட்கள் அடைத்துவைத்து, மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியதாகவும் பின்னர் சிறுமியின் உடலை சிதைத்து அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 18 வயதுக்குட்பட்ட நபர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றொரு அரச அதிகாரி ஆகியோரும் அடங்கியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். குற்றப்பிரிவு பொலிஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது, உள்ளூர் வழக்கறிஞர்கள் போராட்டம் செய்ததை அடுத்து இதில் இந்திய உச்ச (உயர்) நீதிமன்றம் தலையிட்டதுடன் வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரித்த, பதான்கோர்ட் நகரிலுள்ள நீதிமன்றம் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
18 வயதுக்குட்பட்ட இளைஞன் இந்நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை. அவன் மீதான வழக்கு தனியாக நடைபெறுகிறது.
இவ்வழக்கின் குற்றவாளிகள் 6 பேருக்குமான தண்டனை இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது.