• Sat. Oct 11th, 2025

சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு – ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

Byadmin

Jun 24, 2019

(சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு – ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு)

ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் பிரஜா வேதிகா என்ற அரசு கட்டிடம் உள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் இன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆந்திராவில் உள்ள 13 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.

இன்று கூட்டம் நடைபெறும் பிரஜா வேதிகா கட்டிடம் கடந்த ஆட்சியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் இதை கட்டுவதற்கு முறைப்படி சுற்றுச்சூழல் துறையிடமோ, உள்ளாட்சி அமைப்பிடமோ எந்த அனுமதியும் பெற வில்லை. விதிகளுக்கு மாறாக முன்னாள் முதல்-மந்திரி வீடு அருகே இது கட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று விதியை மீறி பொதுமக்களில் யாராவது ஒருவர் கட்டிடம் கட்டி இருந்தால் அதை அரசு விட்டுவைக்குமா? எனவே விதியை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடமும் அகற்றப்பட வேண்டும்.

இன்று இங்கு கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நாளை காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் இந்த கட்டிடம் இடிக்கப்படும். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதியை மீறினால் அரசு கட்டிடம் என்றாலும் இடிக்கப்படுவதுதான் நீதி. அதைத்தான் செய்ய இருக்கிறோம்.

இந்த ஆட்சியில் அனைவரும் சமம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லை. அனைவருடைய குறைகளும் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் கலெக்டர்கள், பொது மக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெலுங்கு புத்தாண்டு தினத்தில் ஆந்திராவில் வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் மனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முறைப்படி வழங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் நிலத்தை அதிகாரிகள் காண்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *