• Sat. Oct 11th, 2025

பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது – மஹிந்த

Byadmin

Jun 18, 2019

(பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது – மஹிந்த)

நாட்டில்  பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழித்து   தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும்  பொறுப்பு  முஸ்லிம் சமூகத்தினருக்கு   காணப்படுகின்றது. 


அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து குறுகிய காலத்துக்குள்   பாதுகாப்பு தரப்பினர்  தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளார்கள்.  நாட்டை  பாதுகாக்க அனைத்து  மக்களும் முழு  ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

குருநாகலை நகரில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம் பெற்ற  இன மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான நிகழ்வில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுக்கும்  அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிர்க்கட்சியினர் என்ற பதவியில் இருந்துக் கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்ற தேவை  கிடையாது. மக்களின் நலன்களை  முன்னிலைப்படுத்தி  முன்னெடுக்கப்படும்  அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு  ஒருபோதும் எதிர்ப்பினை தெரிவிக்கமாட்டோம், முழுமையான ஆதரவு வழங்கப்படும்.
கடந்த காலங்களில் பேருவளையில் ஆரம்பித்த வன்முறை அம்பாறை, அளுத்கமை மற்றும் கண்டி, திகன ஆகிய பிரதேசங்களில்  தாக்கம் செலுத்தி  பல விளைவுகளை  ஏற்படுத்தியது. இவ்வாறான இனகலவரம் இனி ஏற்பட கூடாது என்பதற்காக  அனைத்து தரப்பினரும் பாராளுமன்றத்தில் ஒருமித்து செயற்பட்டு  பாதுகாப்பு  நடவடிக்கைகளை  செயற்படுத்தினோம்.

ஈஸ்டர் ஞாயிறு  குண்டு தாக்குதல் அனைத்து இனத்தவர்களினாலும் கடுமையாக  கண்டனத்துக்குரியதாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து  நாடு பொருளாதாரம்,  தேசிய  நல்லிணக்கம் ஆகியவற்றில் பின்னடைவினை எதிர்க் கொண்டுள்ளது. அனைத்து நாடுகளிலும்  செயற்படும் இந்த தீவிரவாதம் எமது நாட்டிலும்  தாக்குதலை மேற்கொண்டமையினால் அனைவருக்கும்  பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. 30வருட கால பயங்கரவாதத்தை  அனைத்து  தரப்பினரும் ஒன்றினைந்தே தோற்கடித்துள்ளோம். 
தற்போது  எம்மவர்களினால் ஏற்பட்டுள்ள  தீவிரவாதத்தை அனைவரும் ஒன்றினைந்தே   எதிர்க் கொள்ள வேண்டும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

(இராஜதுரை ஹஷான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *