• Sun. Oct 12th, 2025

சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களுக்கு கோத்தாபயவின் ஆட்சியே சிறந்தது : உவைஸ் ஹாஜி

Byadmin

Sep 12, 2019

( சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களுக்கு கோத்தாபயவின் ஆட்சியே சிறந்தது : உவைஸ் ஹாஜி )

முஸ்லிம்கள் என்றும் சமாதானத்தை விரும்புகிறவர்கள். சமாதானச் சூழலில் வாழ நினைக்கிறவர்கள். இவ்வாறு சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன்று  தீவிரவாதிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 இந்தக் குற்றச்சாட்டில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்கக் கூடிய சிறந்த ஆளுமை, பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோதபாய ராஜபக்ஷ்விடமே இருப்பதாக, மத்திய கொழும்பு அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட முஸ்லிம் சம்மேளன அமைப்பாளருமான ஏ.எல்.எம். உவைஸ் ஹாஜியார் தெரிவித்தார். 

   கொழும்பு மருதானையிலுள்ள ஸ்ரீல.பொ.பெ. கட்சிக் காரியாலயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகளைச் சந்தித்து கருத்துரை வழங்கும்போதே உவைஸ் ஹாஜி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

   அவர் புத்திஜீவிகள் மத்தியில் மேலும் பேசும்போது கூறியதாவது, 

   கோத்தாபய ராஜபக்ஷ் முஸ்லிம்களுக்கு எதிரானவர். பொதுபல சேனாவின் ஆதரவாளர் என்றெல்லாம் முஸ்லிம்களின் மத்தியில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 

   ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த அனைத்து முஸ்லிம்களும் பாரிய மன உளைச்சலுக்குள்ளானார்கள்.

 நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அதிக எண்ணிக்கையான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. எரிக்கப்பட்டன. அத்துடன், உரிய நேரங்களுக்கு தொழுது கொள்ள முடியாமல் முஸ்லிம்கள் அவஸ்தைப்பட்டனர்.

 இது மாத்திரமல்ல, சில இடங்களில் தொழுகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. இத்தனைக்கும் மேலாக, முஸ்லிம்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 

   ஆனால், பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள ஆட்சியின் கீழ், இவ்வாறான எவ்வித வன்முறைச் செயல்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்பதை, மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் ஆணித்தரமாகவும்  கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

   கோத்தாபய ராஜபக்ஷ், முஸ்லிம்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார். பெளத்த மதத்தைப் போன்றே, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை அளிப்பதே அவரது கொள்கையாகும்.

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் காலத்திலேயே முஸ்லிம்களின் வர்த்தகம் அபிவிருத்தி அடைந்து வந்ததைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.  ஆனால், இன்று முஸ்லிம்களின் வர்த்தகம் மிகப் பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. கோத்தாபயவின் எதிர்கால ஆட்சியிலும் மீண்டும் முஸ்லிம்களின் வர்த்தகத்திற்கு சிறந்த உத்தரவாதம் அளிக்கப்படும்.   ஒரு சிலர், இன்றும் கூட மஹிந்தவின் ஆட்சி சரியில்லை எனக் குறை கூறுவதையே கொள்கையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்

. இவர்களுக்கு தேனை வழங்கினாலும்  கூட, சற்று கசப்பாக இருக்கிறதே எனக் கூறும் அளவுக்கு அவர்களின் நிலை தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களின் கருத்தைக் கேட்டு, போலிப் பரப்புக்களை நம்பி நாம் ஒருபோதும் முடிவெடுக்கக் கூடாது என்றார். 
-ஐ. ஏ. காதிர் கான் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *