• Sat. Oct 11th, 2025

பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை..!

Byadmin

Oct 9, 2019

(பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை..!)

பரப்பன அக்ரஹார சிறையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், வெளியில் உள்ளவர்களோடு சரளமாக பேச செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 5 மணி முதல் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள், சிம்கார்டுகள், மதுபாட்டில்கள் சிக்கின. தொடர்ந்து ஒவ்வொரு அறையாக போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்கிய அறைகளிலும் சோதனை நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *