• Fri. Oct 24th, 2025

“முஸ்லிம் சமூகத்துக்காகவே பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு” ஹஸன் அலி

Byadmin

Nov 11, 2019

(“முஸ்லிம் சமூகத்துக்காகவே பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு” ஹஸன் அலி)

முஸ்லிம்கள் தொடர்பான 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரிக்க முன்வந்துள்ளதாக  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி தெரிவித்தார். 
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு  ஒலுவிலில் நடைபெற்றது. இதன் போதே இவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 
முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் கட்சிகள் எவ்வித நிபந்தனையும் விதிக்காமல்  சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.  ஐக்கிய சமாதான கூட்டமைப்பு முஸ்லிம்கள் தொடர்பான 13கோரிக்கைகளை  முன்வைத்து இரு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தோம். 
எங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு எழுத்து மூலம் உறுதிமொழி அளித்ததன் பின்னர் பொதுஜன பெரமுனவுக்கு எங்களது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்து தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். 
தோல்வியோ வெற்றியோ அதற்கப்பால் நின்று முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளோம்.
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக் கருதி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு அதன் பயணத்தை ஆரம்பித்துள்ளது.  எங்களது பயணம் எங்களுக்காக அல்ல முஸ்லிம்களுக்காகவே பயணிக்கும். எதிர்காலத்தில் முஸ்லிம் சமூம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். என்பதே எங்களது இலக்காகும். 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்காமல் முதலில் எதிர்த்தவன் நான். தற்போது முஸ்லிம்களின் இருப்பு, அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ள நிலையில் பொதுஜன பெரமுனவ ஆதரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம். 
தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுகின்ற போது முஸ்லிம்களின் நீண்ட கால அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு வழிவகைகள் ஏற்படுத்த வேண்டும்.  முஸ்லிம்களின் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அவர்களுக்குத் தேவையான நிருவாக அலகுகள் மற்றும் காணிகளை பெற்றுக் கொள்வதற்கு எங்களது நிபந்தனைகளாக முன்வைத்துள்ளோம் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *