(“முஸ்லிம் நாடுகளில் UNP ஆதரவு அமெரிக்கா புகுந்து செய்யும் அட்டூழியங்களை நினைத்துப் பாருங்கள்” – பசில்)
ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு எதிர்வரும் 17ஆம் திகதி இந்த நாட்டில் இன மத பேதம், மனித உரிமை மீறல்கள் ஒழிந்து எல்லோரும் நிம்மதியாக வாழ்வதற்கான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புது யுகம் ஆரம்பமாக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னைக்குடா வீதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வருகின்ற 17ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுகின்ற போது இந்த நாட்டிலுள்ள எந்த சமூகத்தை சேர்ந்தவராயினும் அவர் சம உரிமையுடன், அந்தஸ்துடன் நடத்தப்படுவார் என்கின்ற உத்தரவாதத்தை நான் இங்கு பதிவு செய்து பிரகடனப்படுத்துகின்றேன்.
தொழிலுக்காக, படிப்புக்காக, பணிக்காக, மார்க்க கடமைகளுக்காக செல்லுகின்ற போது இன, மத மொழி வேறுபாடுகளினால் அவர் துன்புறுத்தப்படமாட்டார் என்பதையும் கூறுகின்றேன். மனித உரிமை மீறல்களுக்கும் அநியாயங்களுக்கும் இந்த நாட்டில் இனி இடமில்லை.
கிழக்கு மாகாண மக்கள் சற்று பின்னோக்கி நினைவூட்டிப் பாருங்கள் 2015 ஜனவரி 8க்கு முன்பாக உங்களுக்கு செய்து தரப்பட்ட கார்பெற் வீதிகளை, பாலங்களை, பாடசாலைகளை, நீர்ப்பாசனத்தை, குளங்களை, தொழிற்சாலைகளை, வைத்தியசாலைகளை மஹிந்தவின் அரசாட்சியிலே தான் இவற்றை நீங்கள் அனுபவிக்கக் கிடைத்தது.
முஸ்லிம் தலைவர்கள் இதனை மறந்திருந்தாலும் பொது மக்களாகிய நீங்கள் ஒரு போதும் மறந்திருக்க மாட்டீர்கள், ஒரு தடவை இரண்டு தடவை நீங்கள் தீர்மானத்தில் சறுக்கலடைந்திருக்கலாம் ஆனால் அதே தவறை மூன்றாம் முறையும் செய்யமாட்டீர்கள் என நம்புகின்றேன்.
இலங்கையை இன, மத மொழி பேதமற்ற தேசமாக புது யுகம் படைக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்ளுங்கள், நல்லதே நடக்கும் என்றும் நம்புங்கள், 17ம் திகதி நாங்கள் எல்லோரும் இணைந்து பயணிப்போம்.
சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவோம். அச்சமின்றி ஆக்கிரமிப்பின்றி அமைதியான வாழ்க்கை வாழுவோம் அதற்காக அணி திரளுமாறு அன்பாக அறைகூவல் விடுக்கின்றேன்.
முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் உலக முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா புகுந்து செய்த, செய்து கொண்டு வரும் அட்டூழியங்களை நினைத்துப் பாருங்கள். அதுபோல தான் இலங்கையிலும் புகுந்து கொள்வதற்கு அவர்கள் ஒப்பந்தம் செய்கிறார்கள். அதுவும் தேர்தல் காலத்தில் ஒப்பந்தம் செய்கிறார்கள்.
திருகோணமலையிலிருந்து அவர்களது ஆக்கிரமிப்புத் தொடரப்போகிறது. முஸ்லிம் தலைவர்கள் இப்படியான விடயத்தை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.