அத்தியாவசிய சேவைக்காக செல்வோர் இன்று (01) முதல் கடுமையாக பரிசோதிக்கப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உண்மையிலும் அத்தியாவசிய சேவைக்காகவா பயணிக்கின்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். தொழிலுக்கான அடையாள அட்டையுடன், நிறுவன தலைமை அதிகாரியின் கடிதமும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அவர் கூறினார். போலியான கடிதங்களை வைத்திருப்போருக்கும் அவ்வாறான கடிதங்களை விநியோகிப்போருக்கும் எதிராக போலி ஆவணத் தயாரிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே, பொது போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படாது என அவர் கூறினார். எனினும் வைத்தியசாலைகளுக்கு செல்லவும் மருந்தகங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுகின்றமை குறித்து கண்காணிப்பதற்கு 23000 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே , அத்தியாவசிய சேவைகளுக்காக குறைந்தபட்ட பணியாளர் குழுவை மாத்திரம் சேவையில் அமர்த்துமாறு அனைத்து அரச நிறுவனங்களினதும் தலைவர்களிடம் பொதுச்சேவை, உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அலுவலகங்களை திறக்குமாறும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீடுகளில் இருந்து வௌியேறுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொவிட் – 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாகவும் ஜே.ஜே.ரத்னசிறி கூறினார்.
எனினும், அதிகமான வாகனங்கள் நகர்ப் பகுதிகளுக்கு செல்வதை அவதானித்துள்ளதாகவும் இதனால் அத்தியாவசிய சேவைக்கான ஊழியர்களை மட்டுப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற வகையில் ஊழியர்களை சேவையில் அமர்த்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து அமைச்சுகளினதும் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்சேவை, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.