• Sat. Oct 11th, 2025

இலங்கைத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக UAE க்கு நன்றி தெரிவிப்பு, முதலீட்டு ஒப்பந்தத்தை விரைவாக்கவும் திட்டம்

Byadmin

Jun 3, 2021

இலங்கையின் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சர் அகமத் அலி அல் சயீக் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. 

முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக நாடுகளுக்கு இடையேயான உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடியும் என இந்தக் கலந்துரையாடலின் போது வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களைப் பாதுகாத்து, நலன்புரி உதவிகளை வழங்கி வருகின்றமைக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் அல் சயீக்கு வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன நன்றிகளைத் தெரிவித்தார். 

இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஆதரவை பலதரப்பு அரங்குகளில் மேம்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். 

கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் சவால்களில் இருந்து மீண்டு வருவதற்காகவும், எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளினதும் அபிவிருத்திகளை தடையின்றித் தொடர்வதற்காகவும் ஒற்றுமையுடனும், பரஸ்பர ஒத்துழைப்புடனும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார். 

இரு அமைச்சர்களுக்கும் மேலதிகமாக, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மல்ராஜ் டி சில்வா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *