வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தனியார் துறையினருக்கும் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். அதற்காக வரவு செலவு நிவாரண கொடுப்பனவு சட்டமூலம் ஒன்றை கொண்டுவரவேண்டும் என பிரதான தொழிற்சங்க தலைவர்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சல்வாவிடம் கோரிக்கை விடுள்ளனர்.
5 ஆயிரம் நிவாரண கொடுப்பனவை தனியார் துறையினருக்கும் வழங்குவது தொடர்பாக தனியார் துறையினருடன் கலந்துரையாடுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு ஆலாேசனை வழங்கி இருந்தார்.
அதன் பிரகாரம் முதற் கட்டமாக நேற்று தொழில் அமைச்சில் நாட்டின் பிரதான தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்போதே தொழிற்சங்க தலைவர்கள் அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் லேஸ்லி தேவிந்திர குறிப்பிடுகையில், 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறையினருக்கும் வழங்குவதற்கு அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
என்றாலும் இந்த கொடுப்பனவு தொடர்பில் செயற்படும்போது இடம்பெறும் முற்தரப்பு சிநேகபூர்வத்தை பாதுகாப்பதற்கும் கவனம் செலுத்தவேண்டும். இந்த கொடுப்பனவை தனியார் துறையினருக்கு வழங்குவதற்கு முதலாளிமார் இணங்காவிட்டால் மாத்திரம் சட்டமூலம் கொண்டுவந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
தொழிற்சங்க தலைர் என்டன் மாகஸ் தெரிவிக்கையில், உலகலாவிய நெருக்கடிக்கு மத்தியில் நாங்கள் மிகவும் நேர்மையாக கொவிட் தொற்று நிலைமையில் செயற்பட்டோம். என்றாலும் முதலாளிமார் அவ்வாறு நேர்மையாக செயற்படாமல், தொழிலாளர்களின் முதுகில் குத்தியுள்ளார்கள்.
பொறுப்புவாய்ந்த தனியார் துறையாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக இருந்தால், அமைச்சர் கொண்டுவரும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கு இந்த பிரேரணைக்கு முதலாளிமார் எதிர்ப்பு தெரிவிக்காமல் நிச்சயமாக ஆதரவை வழங்கவேண்டும் என்றார்.
இதன்போது இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் எஸ்.பி. விஜேகுமார் தெரிவிக்கையில், இந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தில் இணைத்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தேசிய சேவை சங்கத்தின் சுரங்க நாவுலகே தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து மக்களும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள நிலைமையில் அரச ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவை வழங்குவது அநீதியாகும். அதனால் தனியார் துறை அனைவருக்கும் இந்த 5 ஆயிரம் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர் தலையிடவேண்டும் என்றார்.
இறுதியாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா குறிப்பிடுகையில்,
தொழிற்சங்க தலைவர்கள் முன்வைத்த பிரேரணைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பேன். நாட்டின் தொழில் செய்யும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் இருப்பது தனியார் துறைகளிலாகும். அதனால் அவர்களுக்கு இந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இதுதொடர்பாக அடுத்த வாரம் சேவை சம்மேளத்தின் பிரதிநிதிகளுடனும் தோட்ட கம்பனிகளின் பிரதானிகளுடனும் கலந்துரையாடுவேன்.
இவர்கள் அனைவரதும் கருத்துக்களையும் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேன் என்றார்.