• Tue. Oct 14th, 2025

குறைகளை மட்டுமே கூறுவது திறமையின்மையின் வெளிப்பாடு – ஜனாதிபதி

Byadmin

Jan 8, 2022

மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடமையாகும். நாடு பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போது அனைவரும் ஒரு குழுவாக அவற்றுக்கு முகங்கொடுப்பது கூட்டுப் பொறுப்பாகும்.

அவ்வாறு செய்யாமல் குறைகளை மட்டும் விமர்சிப்பதானது விமர்சனங்களை முன்வைப்பவர்களின் திறமையின்மையே ஆகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றி சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம்.

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் அபிலாஷைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாகும் வகையில், ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய மொனராகலை – சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தேசிய பாடசாலையாக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

பாடசாலை அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும்போது, சகல திறமைகளுடன் கூடியவர்களாக மாணவர்கள் வெளியேற வேண்டும். அதற்கேற்றவாறான கல்வி முறைமை, ‘சுபீட்சத்தின் நோக்கு’ கல்வி மறுசீரமைப்பின் மூலம் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கி, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தொழிற்படையாக முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும்.

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும். ஏற்படும் பின்னடைவுகளை ஒரு குழுவாக எதிர்கொள்வது கூட்டுப் பொறுப்பாகும். அவ்வாறு செய்யாமல் குறைகளை மட்டும் விமர்சிப்பதானது விமர்சனங்களை முன்வைப்பவர்களின் திறமையின்மையே ஆகும்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றி சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை.

மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடமையாகும். தீர்மானங்களை எடுக்கும்போது தாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதில் மாத்திரமே அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும். அவ்வாறன்றி சுற்றறிக்கைகளின் மூலம் எவ்வாறு வேலைசெய்யாதிருப்பதென சிந்திக்கக் கூடாது. எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குமாறு, அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

மக்களுக்கான வலுவான அரச சேவையை உருவாக்குவதற்காக, எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளேன். ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் அபிலாஷைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *