நாட்டில் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோய் அபாயம் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் 35,054 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெருமளவானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் கடந்த ஆண்டு 20,657 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு கொழும்பு மாவட்டத்தில் 11,401 டெங்கு நோயாளர்களும், கம்பஹாவில் 6,420 டெங்கு நோயாளர்களும் , களுத்துறையில் 2,836 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கண்டியில் 1,494 , மாத்தளையில் 290 , நுவரெலியாவில் 113, காலியில் 712, அம்பாந்தோட்டையில் 467, மாத்தறையில் 753, யாழ்ப்பாணத்தில் 173, கிளிநொச்சியில் 26, மன்னாரில் 338, வவுனியாவில் 54, முல்லைத்தீவில் 2, மட்டக்களப்பில் 3,515, அம்பாறையில் 118, திருகோணமலையில் 301, கல்முனையில் 304, குருணாகலில் 1828, புத்தளத்தில் 753, அநுராதபுரத்தில் 372, பொலன்னறுவையில் 124, பதுளையில் 763, மொனராகலையில் 200, இரத்தினபுரியில் 930 மற்றும் கேகாலையில் 767 என டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மாதாந்தம் சுமார் 2,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் , பின்னர் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.
எவ்வாறிருப்பினும் மீண்டும் ஒக்டோபர் முதல் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியது. அதாவது ஒக்டோபரில் 2,979 ஆகக் காணப்பட்ட டெங்கு நோயாளர் எண்ணிக்கை, நவம்பரில் 4,561 ஆக உயர்வடைந்தது. அதேபோன்று இந்த எண்ணிக்கை கடந்த டிசம்பரில் 8,096 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனவரி முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களில் 1,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எனவே, கடந்த ஆண்டை விட இவ்வாண்டு டெங்கு நோயாளர் பதிவாகும் வீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதனைத் தடுப்பதற்கு மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.