• Sat. Oct 11th, 2025

யூதர்களின் மனதில் இறைவன் ஏற்படுத்திய அச்சம்

Byadmin

Jul 5, 2017

குறைழா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காகப் பல விதமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்திருந்தனர்.

அகழ்ப் போரின்போது ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான இப்னுல் அரிகா எனப்படுபவன் அம்பெய்துவிட்டான். அருகில் இருந்து, அவரது உடல் நலத்தை விசாரித்து அறிவதற்கு வசதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலிலேயே அவருக்காகக் கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துவிட்டு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள்.

அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மனித உருவில் வந்து, “நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டீர்களா? வானவர்களாகிய நாங்கள் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. எதிரிகளை நோக்கிப் புறப்படுங்கள்” என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இப்போது எங்கே?” என்று கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் பனூ குறைழா குலத்தாரின் வசிப்பிடம் நோக்கி சைகை செய்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்று அவர்களுடன் போரிட்டார்கள். யூதர்கள் பெருமளவு உணவுகளையும் தேவையான பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தனர்.

கிணறுகளும் பலமிக்கக் கோட்டைகளும் அவர்களிடம் இருந்தன. ஆனால், முஸ்லிம்களோ யூதர்களின் கோட்டைக்கு வெளியே திறந்த வெளியில் கடுங்குளிரால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். உணவுப் பற்றாக்குறையால் கடுமையான பசிக்கு ஆளாகி, துன்பத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். போரில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால் அதிகமான களைப்புற்றிருந்தனர். ஆக, இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் மீது முற்றுகையை நீடித்தாலும் அதைத் தாங்கும் சக்தி யூதர்களிடம் இருந்தும் அவர்கள் அதற்குத் துணியவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான்.

அவர்கள் நிலைகுலைந்தனர். அலி இப்னு அபூதாலிப் (ரலி), ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) இருவரும் முஸ்லிம்களுக்கு முன் நின்று வீரமூட்டினர். முஸ்லிம்களின் உணர்வுகளையும் வீரத்தையும் ஆவேசத்தையும் யூதர்கள் புரிந்துகொண்டனர். ஆகையால் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை பனூ குறைழா குலத்தார் ஏற்றுக் கொள்வதற்குத் தீவிரம் காட்டினர்.

-ஜெசீலா பானு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *