• Sat. Oct 11th, 2025

“விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது” – கட்டார்

Byadmin

Jul 5, 2017 , , ,

அரபு நாடுகளில் ஒன்றான கத்தார், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஷியா பிரிவினர் ஆட்சி செய்யும் ஈரானுடன் கைகோர்த்து இருப்பதாகவும் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் குற்றம் சாட்டின. எனவே கத்தாருடனான தூதரக உறவுகளை கடந்த மாதம் இந்த நாடுகள் முறித்துக்கொண்டன.

மேலும் இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர 13 நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை கடந்த 22–ந் தேதி கத்தாருக்கு வழங்கிய இந்த நாடுகள், இது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், கத்தாரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே கத்தார் விவகாரத்தில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் குவைத் அரசு, கத்தாரின் பதில் நடவடிக்கை தாமதத்துக்கு தாங்களே காரணம் என கூறியுள்ளது. இதனால் கத்தாருக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து அரபு நாடுகள் அறிவித்து உள்ளன.

இந்த நிலையில் கத்தாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக கத்தார் கடுமையான போக்கை எப்போதும் எடுத்து வந்திருக்கிறது என குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானி,

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் தேச பாதுகாப்பு என்பது கத்தாருக்கு மட்டுமான பிரச்சினை இல்லை என்றும் அண்டை நாடுகளுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கத்தார் மீது நெருக்கடி நிலையை திணித்த ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக கூறி வருவது மிகைப்படுத்தப்பட்ட பொய் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், கத்தாரின் நட்பு நாடுகளின் கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருக்கிறது. அதேபோல் நடவடிக்கை எடுக்க முடியாத ஒன்றாகவும் உள்ளது.

இந்த கடுமையான போக்கு தீவிரவாதம் தொடர்பானது அல்ல. பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது என்றும் அல்-தானி கூறியுள்ளார்.

கத்தார் வெளிவிவகார அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *