(இராஜதுரை ஹஷான்)
தேசிய மின்னுற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு தீர்வு காண மின் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன நிபுணர் குழுவிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
எக்காரணிகளுக்காகவும் மின்கட்டணம் அதிகரிப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
மின்சாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய மின் உற்பத்தி மற்றும மின்விநியோக கட்டமைப்பில் காணப்பட்ட சிக்கல் நிலைமையினால் மின்விநியோகம் தொடர்பில் கடந்த மாதம் பெரும் சர்ச்சை நிலவியது.
இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மின்விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என மின்சார சபை தொழிற்சங்கத்தினர் மக்கள் மத்தியில் பொய்யான கருத்தினை குறிப்பிட்டார்கள்.
கடந்த மாதம் நாடுதழுவிய ரீதியில் மின்விநியோகம் துண்டிக்கப்படவில்லை. நிலக்கரி மின்நிலையத்தின் 300மெகாவாட் மின்பிறப்பாக்கி தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி மின்னுற்பத்தி தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பிற்கு முழுமையாக கிடைக்கப்பெறுகிறது. தற்போதைய வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு நீர்மின்னுற்பத்தியை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனியார் தரப்பினரிடமிருந்து 6மாத காலத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சார சபை தொழிற்சங்கத்தினர் பிறிதொரு பொய்யான விடயத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.
எக்காரணிகளுக்காகவும் மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது. புதுப்பிக்கத்தக்க வளங்கள் ஊடாக 1000மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.