(எம்.எப்.எம்.பஸீர்)
எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த. உயர் தர பரீட்சையின் நேர சூசியை தடை செய்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.
‘வினிவித பெரமுன’ வின் செயலாளர் நாகநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த எழுத்தானை கோரும் (ரிட்) மனுவே இவ்வாறு விசாரணைக்கு ஏற்காமலேயே நிராகரிக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி சோபித்த ராஜகருணா அறிவித்தார்.
மனு குறித்த தீர்ப்பை அறிவித்த நீதிபதி சோபித்த ராஜகருணா, இந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ள நிவாரணங்களை வழங்க தனது நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என அறிவித்தார்.
அத்துடன், தமது நீதிமன்றம் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான நீதிமன்ற அதிகாரத்தை செயற்படுத்தும் நீதிமன்றம் அல்லவெனவும், அதனால் இந்த மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணங்கள் தொடர்பில் ஆராய நீதிமன்ற அதிகாரம் இம்மன்றுக்கு இல்லை எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி சோபித்த ராஜகருணா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
நேற்று இந்த ரிட் மனு பரிசீலிக்கப்பட்ட போது, மனுதாரரான நாகாநந்த கொடித்துவக்கு, நீதிமன்றில் விடயங்களை முன் வைத்திருந்தார்.
இதன்போது, கொவிட் நிலைமை மற்றும் ஆசிரியர் பணி பகிஷ்கரிப்பு நிலைமை காரணமாக உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், பூரணமான கற்றல் நடவடிக்கையில் ஈடுபடும் காலப்பகுதியில் 90 வீதத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதனால் அவ்வாறு இழந்த கற்றலுக்கான காலப்பகுதியை மீள மாணவர்களுக்கு வழங்குவதற்காக கடந்த நவம்பர் மாதம் முதல் அமுலாகும் வகையில் 20 வாரங்களுக்கு உயர் தர பரீட்சையை பிற்போட வேண்டும் எனவும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை கணக்கில் கொள்ளாது பரீட்சையை நடாத்த அரசு தீர்மானம் எடுத்துள்ளது.
அதனால் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள, உயர் தர பரீட்சையின் நேர சூசியை தடை செய்து இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும், அந்த பரீட்சையை 20 வாரங்கள் பிற்போட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் என நாகநந்த கொடித்துவக்கு கோரினார்.
எனினும் அந்த கோரிக்கைக்கு ஆட்சேபனை முன் வைத்து, இடையீட்டு மனுதாரர்களான இம்முறை பரீட்சைக்கு தோற்றும் தியாரா வர்ணசூரிய மற்றும் தேவ்சினி தாபரே ஆகிய மாணவிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதங்களை முன் வைத்தனர்.
மனு தாரர் கோரும் நிவாரணங்களை வழங்க மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் மனுதாரர் கோரும் நிவாரணங்களை நீதிமன்றம் வழங்கினால், அது, முழு கல்வித் துறையிலும் பாரிய சிக்கல்களைக் கொண்டுவரும் எனவும் அதனால் மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் எனவும் கோரினர்.
இந்நிலையில் இரு தரப்பினரும் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி சோபித்த ராஜகருணா, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமளவுக்கு சட்டப் பிண்ணனி இல்லை என சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
முன்னதாக உயர் தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு தள்ளுபடி செய்து உத்தரவிடக் கோரி, நாகநந்த கொடித்துவக்கு தாக்கல்ச் செய்த ரிட் மனுவில், பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சின் செயலர் கபில பெரேரா, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன, தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜே. நவரட்ன ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.