இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) எட்டு (08) முக்கிய பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க மத்திய வங்கி எடுத்துள்ள முயற்சிகளை நிறைவு செய்ய, ஒருங்கிணைந்த முயற்சிகளை அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதேநேரம் பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் என்ற வகையில், பின்வரும் முக்கிய பரிந்துரைகளை கவனத்துடன் பரிசீலிக்குமாறு மத்திய வங்கி அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
அந்த பரிந்துரைகளில் இலங்கை மத்திய வங்கி,
விலையை பிரதிபலிக்கும் வகையில் எரிபொருள் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்களை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள சவாலான பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய வங்கி பரிந்துரைத்தது.
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளை அவசரமாகத் தடுக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல், வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் முதலீடுகளை மேலும் ஊக்குவித்தல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய நகர்வை விரைவுபடுத்துதல் ஆகியவையும் பரிந்துரைகளில் அடங்கும்.
நிலையான அடிப்படையில் பொருத்தமான வரி அதிகரிப்புகள் மூலம் அரசாங்க வருவாயை அதிகரிப்பது மற்றொரு பரிந்துரையாகும். அதன் மாதாந்திர நாணயக் கொள்கை மீளாய்வு அறிக்கையை வெளியிட்டு, மத்திய வங்கியானது அவசர அடிப்படையில் வெளிநாட்டு நிதி மற்றும் கடன் அல்லாத அந்நிய செலாவணி வரவுகளைத் திரட்டவும், மூலோபாயமற்ற மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துக்களைப் பணமாக்குதல் மற்றும் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற மூலதனத் திட்டங்களை ஒத்திவைக்கவும் பரிந்துரைத்தது.