• Tue. Oct 14th, 2025

12 வயதுக்கு உட்பட்ட விசேட தேவையுடையோருக்கு பைசர் தடுப்பூசி

Byadmin

Mar 5, 2022

நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்து அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஏனைய நோய் நிலைமைகளும் அதிகரித்து வருகின்றன. 

தடுப்பூசி வழங்கலின் ஊடாக கொவிட் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படு;த்தப்பட்டுள்ளது. எனினும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி வழங்கப்படவில்லை. அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுமெனில் பெற்றோர் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

அதே போன்று 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதும் அத்தியாவசியமானதாகும். 

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் இலங்கையில் மிகக் குறைவாகும். 

எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளானாலும் அவர்களுக்கு அறிகுறிகள் தென்படும் வீதம் மிகக் குறைவாகும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் இன்றியும் இருக்கலாம்.

எவ்வாறிருப்பினும் பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் இந்த நிலைமை மாற்றமடையலாம். எனவே தான் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. 

அதேவேளை 12 வயதுக்கு உட்பட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது. எவ்வாறிருப்பினும் இவை தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *