• Fri. Oct 17th, 2025

இன்று சர்வதேச மகளிர் தினம்

Byadmin

Mar 8, 2022

இன்று சர்வதேச மகளிர் தினமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்துக்கு ஐ.நா. மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன்மொழிகிறது. அதன்படி இந்த ஆண்டு ‘சிறப்பான வாழ்க்கைக்குச் சமநிலை’ என்ற கருப்பொருள் முன்மொழியப்பட்டுள்ளது.

பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  

18 ஆம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பொருத்தமானவர்கள் என்று முடக்கிவைக்கப்பட்டார்கள். 

இந்த நிலை மெல்ல மாறி, 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணியில் கால்பதித்தாலும் அவர்களுக்கான ஊதியத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. 

ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. 

இதனால் கொதித்தெழுந்த பெண்கள் 1910 ஆம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். 

இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தங்கள் உரிமைகளுக்காக பெண்கள் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். அந்த மாநாட்டில் கலந்து கொண்டர்களின் முக்கியமானவர் ஜேர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின். 

பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கிளாரா, பெண்களின் உரிமைகளை பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கருதினார். அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தினத்தில் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தன. 

அதற்கு பின் உலகை திரும்பிப்பார்க்க வைத்த புரட்சி என்றால், 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி. இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது என்பது வரலாறு. இதனையடுத்து 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். 

ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில் புரட்சி நடந்த பெப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

க்ரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8 ஆம் திகதியாக இருந்தது. அதனை அடுத்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி நடத்த வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *