• Sat. Oct 11th, 2025

எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை : இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Byadmin

Mar 30, 2022

புத்தாண்டு காலத்தில் தடையின்றிய வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படும். எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரிக்க தற்போது எதிர்பார்க்கவில்லை.

தேவைக்கேற்ப டீசல்,மண்ணெண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் அவற்றின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களை காட்டிலும் தற்போது எரிபொருள் கொள்வனவு மற்றும் இறக்குமதிக்கான செலவு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு எரிபொருள் கொள்வனவிற்காக 2.5 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன்,இவ்வருடத்தின் முதல் மூன்று காலப்பகுதிகளில் மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 1.2 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் எரிபொருள் இறக்குமதிக்கு மாத்திரம் செலவாகியுள்ளது என்பதை சாதாரணமாக கருத முடியாது.

கடந்த வருடம் ஒரு எண்ணெய் கப்பலுக்கு 24 தொடக்கம் 25 மில்லியன் வரை டொலர் செலுத்தப்பட்டது.தற்போது அத்தொகை 45 தொடக்கம் 55 மில்லியன் டொலர் வரை உயர்வடைந்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் எரிபொருள் பாவனைக்கான கேள்வி தற்போது சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு 1 இலட்சத்து 39 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் விநியோகிக்கப்பட்டது.கடந்த ஜனவரி மாதம் 1 இலட்சத்து 98ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ள நிலைமையில் இம்மாதம் 2 இலட்சத்து 11ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழமையான நாட்களில் தினசரி 4000ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை விநியோகிக்கும்.

தற்போது 7000-8000 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் விநியோகித்துள்ள நிலைமையிலும் அதிக கேள்வி நிலவுவதால் டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

06மாத காலத்திற்கு தேவையான மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.

தென்னாபிரிக்காவில் இருந்து டீசல் இறக்குமதி செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.புத்தாண்டு காலத்தில் தடையின்றிய வகையில் எரிபொருள் விநியோகிக்க முடியும்.

டீசலுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலைமையில் மண்ணெண்ணெய் கொள்முதல் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பேரூந்துகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகின்றமை பொருத்தமற்ற செயற்பாடாக கருத வேண்டும்.

தேவைக்கேற்ப மண்ணெண்ணெய்,டீசல் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் அவற்றின் விநியோகம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரிப்பது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்படவில்லை.எவ்வாறு இருப்பினும் நட்டமடைந்த நிலையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *