சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் ஜானாசா நேற்று பண்டாரகம, அதுலுகமவில் உள்ள அவரது வீட்டின் பின்புறமுள்ள சதுப்பு நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி பாத்திமா ஆயிஷாவின் ஜனாசாவின் பிரேதப் பரிசோதனை இன்று (29) நடைபெறவுள்ளது.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹொரணை பதில் நீதவான் மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆகியோர் அங்கு வந்து சிறுமியின் மரணம் தொடர்பில் நேற்று நீதவான் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
உடல் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உறுதியளித்துள்ளார்.