• Sat. Oct 11th, 2025

“பௌத்தத்தின் முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை” – ரவூப் ஹக்கீம்

Byadmin

Jul 11, 2017 ,
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை. ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா சனிக்­கி­ழ­மை (08) ஹெம்மாதகம அல்அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிகள் எடுக்கும்போது அதனை தடுக்க பூதாகரமான முரண்பாடுகளை ஏற்படுத்துவதே வரலாறு. இந்த நாட்டில் அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்த சகல சந்தர்பங்களிலும் அதனை தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர். இப்போதும் அதேபோன்றதொரு நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை முன்னெடுத்து தீர்வுகள் தொடர்பில் சிந்தித்து முயற்சிகளை முன்னெடுத்து வரும்போது அதனை தடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் பௌத்த மதம் புறக்கணிக்கப்பட்ட வேண்டும் என நாம் ஒருபோதும் கூறவில்லை, எனினும் நாட்டிலுள்ள ஏனைய மதங்களை பாதுகாக்கும் இணை உடன்படிக்கைகளை அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என நாம் கூறியுள்ளோம்.
குறிப்பாக இந்த காலப்பகுதியில் நடைபெற்றுள்ள சில சம்பவங்களை கவனிக்கும்போது இவ்வாறான ஒரு மாற்று நடவடிக்கை வேண்டும் என கூறும் சிலர் பாராளுமன்றத்தில் உள்ளனர். ஆகவே, மாற்று நடவடிக்கையாக இவ்வாறான உப சரத்தை உள்ளடக்குவது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். அது மட்டுமே இடம்பெற்றது. அதற்கு மாறாக பௌத்த மதத்தின் முன்னுரிமை நிராகரிக்கப்படும் வகையில் எவ்வித நடவடிக்கைகளையும் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கப்படவில்லை.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் இதனை முன்னெடுக்கவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவிக்கிறேன். இந்த நாட்டின் தலைமைத்துவத்தை கொண்டுள்ள மாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோளை விடுத்துள்ளனர். குறிப்பாக புதிய அரசியலமைப்பு ஒன்று வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலம் அழிக்கப்படுகின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், பௌத்த மாநாயக்க தேரர்கள் கூறிய கருத்துகள் முழுமையாக தவறானவையாகும். ஹெம்மாதகமயில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து அங்கு ஏற்பட்ட சமயரூபம், கல்வி, பொருளாதாரம் மற்றும் நிர்வாக வாழ்வியல் பற்றி தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்  விசேட அதிதியாக அமைச்சர் எம்.எச்.ஏ. கபீர் ஹாசிம் கலந்துகொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Firows Mohamed AJ –

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *