• Mon. Oct 13th, 2025

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

Byadmin

Aug 14, 2022

நாளை (15) முதல் திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் அமுலுக்கு வருவதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

அதற்கமைய, ரூ. 15 ஆக உள்ள சாதாரண கடித கட்டணம் ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் தபால் கடிதம் ரூ. 30 இலிருந்து ரூ. 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலும் பொதுமக்களிடையே சாதாரண தபால் பயன்பாடு குறைவடைந்துள்ளதாகவும், தற்போது தபாலிடப்படும் 95% இற்கும் அதிக கடிதங்கள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தினுடையதாக காணப்படுவதாக தபால் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

கடிதத்தை கொண்டு சேர்க்க செலவு ரூ. 49.80

அதற்கமைய, சாதாரண/ வர்த்தக நோக்கிலான கடிதங்களை கொண்டு சேர்ப்பதற்கான செலவு ரூ. 49.80 ஆக கணக்கிடப்பட்டுள்ளதோடு, அச்செலவை ஈடுசெய்யும் நோக்கில், சாதாரண கடிதங்களுக்கு தற்போது அறவிடப்படும் முத்திரை கட்டணத்தை ரூ. 15 இலிருந்து ரூ. 50ஆக திருத்தம் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற சட்டத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற தொண்டு/ சமூக சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் கட்டணம் உச்சபட்சம் 20 கிராம் வரையான தபாலுக்கான கட்டணம் ரூ. 12 இலிருந்து ரூ. 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 01 – 15 இற்குள் விநியோகிக்கும் கடிதங்கள்

கொழும்பு நகரிற்குள் கொழும்பு 01 – 15 வரை விநியோகிப்பதற்காக, மத்திய தபால் பரிமாற்றகத்தால் பொறுப்பேற்கப்படும் கடிதங்களுக்கான கட்டணம் ரூ. 12 இலிருந்து ரூ. 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணமானது, உச்சபட்சம் 20 கிராமுடைய, ஒரே விலாசத்திலிருந்து குறைந்தபட்சம் 10,000 கடிதங்களை நபரொருவரால் தபாலிடும் கடிதங்களுக்கு பொருந்தும்.

காசுக்கட்டளை உச்சபட்ச தொகை ரூ. 50,000 இலிருந்து ரூ. 100,000

காசுக் கட்டளை மூலம் அனுப்பும் உச்சபட்ச தொகை ரூ. 50,000 இலிருந்து ரூ. 100,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் உப தபாலகங்களில் உச்சபட்சம் ரூ. 25,000 பணத்தையே காசுக்கட்டளையாக அனுப்ப முடியும்.

தபால் அட்டையின் விலை ரூ. 10 இலிருந்து ரூ. 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *