• Sun. Oct 12th, 2025

பசியை போக்கவே நான் பதவியை பொறுப்பேற்றேன், மக்களே அநாவசியச் செலவுகளைத் தவிருங்கள்

Byadmin

Aug 25, 2022

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ இரண்டு ஆண்டுகளாவது தேவை, அதிலும் எதிர்வரும் ஓராண்டு எமக்கு மிகப் பெரிய சவாலான ஆண்டாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாட்டு மக்கள் அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை சேமித்து வைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, இலங்கை அரசாங்கத்தால் 300 இற்கும் மேற்பட்ட பொருள்களுக்கு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த 300 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

மக்களின் பசியையாவது போக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் நான் பிரதமர் பதவியை (மே மாதம்) பொறுப்பேற்றேன்.

அதன் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி தெரிவில் நான் போட்டியிட்டேன். மக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடியிருக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் ஜனாதிபதியாகத் தெரிவாகினேன்.

எனினும், மிகவும் சவால்மிக்க காலகட்டத்தில்தான் இந்த அதி உயர் பதவியில் நான் இருக்கின்றேன். பொருளாதார ரீதியில் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நான் முதலில் தீர்வு கண்டே தீருவேன்.

அதன் பின்னர் தேசிய ரீதியிலான ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் அனைத்துக் கட்சிகளின் கலந்தாய்வுடன் தீர்வுக்கான எனது பயணம் தொடரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *