சரிந்த பொருளாதாரத்தை நாட்டுக்கு மீட்பதற்கான வேலைத்திட்டத்துடன் கூடிய எதிர்காலத்தை இலக்கு வைத்த வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (14) நிதியமைச்சராக சமர்ப்பித்ததாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனவே பாரம்பரியமாக வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் சில விடயங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை இன்று (14) குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது, சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மிகவும் கடினமான பொருளாதார நிலைமைகளின் கீழ் உருவாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமே இது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உதவும் பிற நிதி நிறுவனங்களுடனான விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சவாலான வரவுசெலவுத் திட்டம். அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மக்களின் தோள்களில் சுமையில்லாமல் இருப்பதற்கு மிகவும் சிந்தனையுடன் முன்வைக்கப்பட்ட தொலைநோக்கு வரவு செலவுத் திட்டமாகவே இந்த வரவு செலவுத் திட்டத்தை நான் பார்க்கிறேன்.
நாங்கள் மிகவும் கடினமான மற்றும் சவாலான காலகட்டத்தை எதிர்கொள்கிறோம். கடந்த காலங்களில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர். இப்போது அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் தற்போது மெதுவான மற்றும் நிலையான பாதையில் செல்கிறது.
எதிர்க்கட்சிகள் இந்த வரவு செலவுத் திட்டத்தை விமர்சித்து பாரம்பரிய அரசியலை செய்வார்கள். ஆனால் நாங்கள் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். அதற்காக எம்முடன் கைகோர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.