• Mon. Oct 13th, 2025

முதல்தடவை தோற்றியவர்களில் 74.52% பேர் சித்தி, 6,566 பேர் 6 பாடங்களிலும் சித்தியில்லை, நாடு முழுவதும் 10,863 பேருக்கு 9 A

Byadmin

Nov 27, 2022

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 (231,982) பேர் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (25) வெளியிடப்பட்ட இப்பெறுபேறுகள் தொடர்பில் நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2021 க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு மொத்தமாக 5 இலட்சத்து 18 ஆயிரத்து 245 (518,245)  பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 85 (477,085) பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 460 (110,460) பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.

பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை பரீட்சார்த்திகளில் ஒரு பாடத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோற்றியவர்கள் 311,553 பேர்
5 அல்லது அதற்கு அதிகமான பாடங்களில் தோற்றியோர் 311,321 பேர்

இவர்களில் 231,982 பேர் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்கமைய முதல் தடவை (பாடசாலை ரீதியாக) தோற்றிய மாணவர்களில் 74.52% பேர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

6 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு தோற்றியவர்களில் 6,566 பேர் 6 பாடங்களிலும் சித்தியடையவில்லை என அவர் தெரிவித்தார். இது மொத்த பாடசாலை பரீட்சார்த்திகளில் 2.11% ஆகும்.

அத்துடன் அனைத்து பாடங்களிலும் (9 A) முதற் தர சித்தி பெற்ற மாணவர்கள் 10,863 பேர் என அவர் தெரிவித்தார்.

மேலும், 498 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *