• Sat. Oct 11th, 2025

உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

Byadmin

Mar 2, 2023


எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மூன்று போகங்களுக்குப் பிறகு இம்முறை TSP (சேற்று உரம்) உரத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த உரத்துடனான கப்பல் ஏதிர்வரும் மார்ச் 15 – 20 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடைய உள்ளது. இவற்றிற்கு விவசாயிகளிடம் இருந்து எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது இவை அனைத்தையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் அவர்கள் நாட்டுக்கு வழங்கிய உழைப்பை மற்றும் அவர்களின் தியாகங்களை கௌரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இவற்றை வழங்க உள்ளோம்.

அத்துடன், எதிர்வரும் சிறு போகத்திற்கு மட்டுமன்றி கடந்த பெரும்போகத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கும் இவற்றை விநியோகிக்க உள்ளோம். அவர்கள் அதனை சேகரித்து வைத்து அடுத்த போகத்திற்கேனும் பயன்படுத்த முடியும்.

தற்போது எம்மிடம் ஓரளவு யூரியா உரங்கள் இருப்பில் காணப்படுகின்றன. 25,000 மெட்ரிக் டொன் டெண்டர் ஒன்றும் தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் ஒரு டெண்டரை எதிர்பார்த்துள்ளோம். இவற்றினூடாக இம்முறை விவசாயிகளுக்கு ஒரு சலுகையாக 10,000 ரூபாவிற்கு யூரியா உரத்தினை குறித்த நேரத்தில் வழங்க உள்ளோம்.

அத்துடன் கடந்த முறை 19,500 ரூபாவிற்கு வழங்கப்பட்ட பண்டி உரத்தை இம்முறை 10,000 ரூபாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளோம். அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *