• Sat. Oct 11th, 2025

அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கான எச்சரிக்கை!

Byadmin

Mar 3, 2023


உலக முதியோர் சனத்தொகையில் 1.9 பில்லியனுக்கும் அதிகமானோர் அதிக உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அவர்களில் 650 மில்லியன் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்தார்.

நாளை 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச உடல் பருமன் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

உலக சனத்தொகையில் 39% மானோர் இவ்வாறு அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காணப்படுகின்றனர். 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொற்றா நோய்களுக்கான காரணிகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 22% ஆண்களும் 34% பெண்களும் அதிக உடல் எடை கொணடவர்களாக காணப்பட்டனர். பின்னர் 2021 ஆம் ஆண்டில் அதே கணக்கெடுப்பின்படி, 31% ஆண்களும் 47.7% பெண்களும் அதிக எடை கொண்டவர்களாக பதிவாகியுள்ளனர்.

மேலும், சிறுவர்கள் மத்தியிலும் பொதுவாக இந்த அதிக உடல் பருமன் பிரச்சினை காணப்படுகிறது. இது அவர்களுக்கு மிகவும் பாதகமானதொரு நிலையாகும். எனவே இது குறித்து அறிந்திருப்பது அவசியம். இதனூடாக உயர் குருதி அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் போன்ற தொற்றா நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி, தனது வாழ்க்கை முறையை முறைப்படுத்துதல், மருந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (BMI மதிப்பு) 18.5 முதல் 25 வரை பராமரித்தல் போன்ற முறைகளைக் கடைப்பிடிப்பதன் ஊடாக இந்த உடல் பருமனைக் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *