• Sat. Oct 11th, 2025

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி!

Byadmin

Mar 27, 2023


மூளைச்சாவு அடைந்த நோயாளர்களின் உடல் உறுப்புக்களை வேறு நோயாளர்களுக்கு பொருத்தும் வெற்றிகரமான சத்திர சிகிச்சைகள் வைத்திய துறையில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பாடசாலை மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 19 வயதுடைய விஹகனா ஆரியசிங்க என்ற யுவதி திடீர் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் இவ்வாறு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

குருணாகல், அம்பன்பொல நகரில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் விஹகனா ஆரியசிங்க இளைய பிள்ளையாவார்.

அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்த விஹங்கன குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் வணிக ரீதியில் உயர்தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று வந்தவர் ஆவார்.

இந் நிலையில் விஹகனா மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த நிலையில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் மற்றுமொரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும், ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றும் கண்களின் சவ்வுகள் மேலும் மூன்று பேரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியுள்ளன.

விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் மூலம் மொத்தம் 7 பேர் உயிர் காக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் அறுவை சிகிச்சை இலங்கையின் சிறப்பு வைத்தியர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக ஆபத்தான நிலையிலிருந்த ஒருவருக்கு இந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த உறுப்புகள் தனித்தனியாகப் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது இலங்கையில் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *