ஹங்கேரி அரசின் 52 மில்லியன் யூரோ நிதி உதவி திட்டத்தின் கீழ் இலங்கையில் செயல்படுத்தப்படும் கொஹுவல சந்தி மற்றும் கெட்டம்பே சந்தியில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்தின் எதிர்கால பணிகள் தொடர்பாக ஹங்கேரி அரச அதிகாரிகளுக்கும் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணத்தவர்த்தனவுக்குமிடையே விசேட கலந்துரையாடலொன்று அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் வெற்றியை கருத்திற்கொண்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மேம்பாலங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வது தொடர்பில் இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதன்படி தற்போதைய நிலைமையில் முன்னுரிமையை கருத்தில் கொண்டு கொஹுவல மேம்பால நிர்மாண பணியை விரைவில் பூர்த்தி செய்யவும் அதன் இரண்டாவது கட்டமாக கெட்டம்பே மேம்பால நிர்மாண பணிகளை நிறைவு செய்வதற்கும் இங்கு ஹங்கேரிய பிரதிநிதிகள் அமைச்சர் முன்னிலையில் இணக்கம் தெரிவித்தனர்.
ஹங்கேரி அரசை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமந்த அத்தலுவகே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ். வீரக்கோன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.