27 ஆம் திகதி உறுப்பினர்களின் கையொப்பம் பெற தீர்மானம்
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குழுவின் அங்கத்தவர்களின் கையொப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இறுதிக் கட்டத்தில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 53 பக்கங்கள் கொண்ட திருத்த பரிந்துரைகளும் கவனத்திற்கொள்ளப்பட்டன என முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்தார்.
சட்டத்திருத்த சிபாரிசு அறிக்கை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவிடம் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எச்.எச்.ஏ. ஹலீம் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்பு விவாதத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக இக்குழு 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் சிரேஷ்ட சட்டத்தரணிகள், நீதிபதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர், செயலாளர் உட்பட முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம் தொடர்பாக தனி நபர் பிரேரணையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.