கம்பளையில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சென்ற மாணவிகளுக்கு பர்தாவை கழற்றி விட்டு பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சை நிலைய அதிகாரிகள் பணிப்புரை விடுத்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டு தற்போது மாணவிகள் சுமுகமான சூழ்நிலையில் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர்.
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட கஹட்டபிடிய அல்-மினா முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் கம்பளை நகரில் இயங்கும் சர்வதேச பாடசாலையொன்றின் மாணவிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சென்றபோது மாணவிகள் பர்தாவை கழற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் முஸ்லிம் மாணவிகள் பர்தாவை கழற்றிவிட்டு பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் இது தொடர்பாக கம்பளை கல்விப்பணிமனை, பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும், பெற்றோர் கம்பளை பொலிஸ் நிலையத்திலும் கண்டி மனித உரிமைகள் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யதுள்ளனர்.
இந்நிலையில் கல்வி அதிகாரிகள் குறித்த பரீட்சை நிலைய நிரந்தர பரீட்சை மேற்பார்வையாளரை இடமாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் புதன்கிழமை முதல் குறித்த பரீட்சை நிலையங்களில் மாணவிகள் எதுவித இடையூறுகளும் இன்றி பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-உடுநுவர, கம்பளை நிருபர்கள் –