மறிச்சுக்கட்டி பிரதேசம் கைநழுவிப்போகும் அபாயம் எழுந்துள்ளது, பாதிக்கப்பட்ட அப்பிரதேசத்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எனவே மறிச்சுக்கட்டி,பாலைக்குழி, கொண்டச்சி,கரடிக்குழி ஆகிய பிரதேசங்களில் தமது பூர்வீக நிலத்தை இழந்து வாழ்கின்றவர்கள் தமது முறைப்பாடுகளை விரைவில் இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மன்னார் முசலி பிரதேசத்திலுள்ள ஹுனைஸ் நகரில் அமைந்துள்ள ஹுனைஸ் பாரூக் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் வகுப்பறை கட்டிடத் தொகுதிகள் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது .இதன் போது உரைநிகழ்த்துகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,
கடந்த யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்த இந்தப்பிரதேசத்து மக்களின் காணிகளை அரச வர்த்தமானி அறிவித்தலின்படி வில்பத்து வனத்திற்கு சொந்தமான பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. இந்தவிடயத்தில் அப்பிரதே பூர்வீக குடிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கிணங்க ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க அவரது செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட உயரதிகாரிகளுடனான சந்திப்பும் முசலி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அதன் பிற்பாடு ஜனாதிபதியின் சுயாதீன குழு இந்தப்பிரதேசத்திற்கு விஜயம்மேற்கொண்டு இப்பிரதேச மக்களின் உண்மையான நிைலவரத்தை கேட்டறியும் நடவடிக்கைகளும், எல்லைகளை மீண்டும் இனங்கண்டு உறுதிப்படுத்தும் நடவடிக்கைளை அண்மையில் மேற்கொண்டதாக அறியக்கிடைத்தது. இதன்போது இந்தப்பிரதேச மக்கள் இந்தவிடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு சரியான தகவல்களை வழங்கத்தவறிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, மறிச்சுக்கட்டி,பாலைக்குழி, கொண்டச்சி,கரடிக்குழி ஆகிய பிரதேசங்களில் தமது பூர்வீக நிலத்தை இழந்து வாழ்கின்றவர்கள் தமது முறைப்பாடுகளை விரைவில் ஜனாதிபதி குழுவிற்கு சமர்ப்பியுங்கள். இந்த விடயத்தில் இந்தப் பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் கரிசனையுடன் செயற்படுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினை பெற்றுக்கொடுப்பதில் முன்னிற்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னுமொரு விடயம் இந்தப்பிரதேசத்தில் அநீதியாக இடம்பெற்றுள்ளது. அதாவது, எல்லைமீள்நிர்ணயம் தொடர்பில் முசலி பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. எமது விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதேச சபை உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்கு புதிய எல்லைப்பிரிப்பானது தடையாக அமைந்துள்ளது. இது தொடர்பில் எமது ஆட்சேபனைகளை நாம் மிகத்தெளிவாக முன்வைத்தும் மீண்டும் அதே தவறு எல்லைப்பிரிப்பில் இடம்பெற்றுள்ளது என்பது அங்கீகரிக்க முடியாத ஒரு விடயமாகும்.
இது தொடர்பில் பல வாதவிவாதங்களில் நாம் பங்குபற்றியுள்ளோம். மிகக்குறைந்த அதிகாரத்தையுடைய சபையாக இருந்தாலும் அதிலும் நாம் பாதிப்படைகின்றவர்களாக, நம்மை ஆக்குகின்ற நிைலவரம் கேள்விக்குட்படுத்தவேண்டியவையே. எனவே இந்த பிழையான எல்லை பிரிப்பு தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தி எமக்குரிய சரியான அளவீடுகளை பெற்றுக்கொள்வதில் நாங்கள் அவதானம் செலுத்தவேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்றார்.