எமது அம்மாவிடம் வாக்குமூலம் பெறுவதாக கூறி அவர்களின் திருமண வாழ்க்கையைப் பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கேள்விகளை கேட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிரிலிய அமைப்பிற்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக யோசித்த ராஜபக்ஸ நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளிவே வரும் போது ஊடகவியலாளர்கள் நாமல் மற்றும் யோசித்தவை சூழ்ந்து கொண்டார்கள். இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
டிபென்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனது அம்மாவிடமும் விசாரணைகளை நடத்தியிருந்தனர். ஆனால் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் வேறு.
“மஹிந்தவை திருமணத்திற்கு முன் எப்போது சந்தித்தீர்கள்? மஹிந்தவை எவ்வாறு திருமணம் செய்தீர்கள்? தற்போது அவரை திருமணம் செய்துள்ளீர்களா?” என்ற கேள்விகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அம்மாவிடம் கேட்டுள்ளனர்.
அவர்களது மூத்த மகனுக்கு 31 வயதாகிவிட்டது. ஆனால் தற்போதுதான் அவர்கள் திருமணம் செய்துள்ளார்களா? என கேள்வி கேட்கின்றனர்.
இவ்வாறான கேள்விகளை கேட்பதால், இது ஒரு ஏமாற்று அரசியல் நாடகம் என்று தெளிவாக தெரிகின்றது. அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், சிரிலிய அமைப்பிற்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனம் றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த விசாரணைகளுக்காக ஷிரந்தி ராஜபக்ச நேற்றுமுன் தினமும், யோசித்த ராஜபக்ஸ நேற்றும் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.