• Sun. Oct 12th, 2025

மாணவனை பாலியல் துன்புறுத்தல் செய்த அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Byadmin

Sep 12, 2023

பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.

“தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும். தற்போது அதிகரித்து வரும் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்.” என்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பில் கோடிட்டு காட்டினார்.

2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி மன்னார் பாடசாலையில் கற்ற 10 வயது மாணவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவன் கல்வி கற்ற பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டார்.

மன்னார் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்க முறையற்ற விசாரணைகளின் பின் சட்ட மா அதிபரினால் மன்னார் மேல் நீதிமன்றில் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் முன்னிலையில் விளக்கம் இடம்பெற்ற நிலையில் நேற்று (11) வழக்கு தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது.

எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் நிகழ்வு – நிபுணத்துவ சாட்சியங்கள் ஊடாக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரினால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி எனக் கண்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, நீதிபதி தனது தீர்ப்பில், 

குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படுகிறது, செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழங்கத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்றும் மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்குத் தொடுநர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி செஸான் மஹ்பூம் வழக்கை நெறிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *