அரச தனியார் துறையின் கூட்டுப் பங்களிப்புடன் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
CIMA நிறுவனம் கொழும்பு சினமன் ஹோட்டலில் நேற்று ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் இவ்வாறு உரையாற்றினார்.
பிரதமர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இரு பிரதான கட்சிகள் ஒன்றுபட்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன. இதைப் போன்று அரச தனியார் துறையின் பங்களிப்புடன் நாட்டை சிறப்பாக அபிவிருத்தி செய்ய முடியும் என்று பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றபோது பெரும்பாலான சவால்கள் இருந்தன. இரண்டு வருடகாலப் பகுதியில் பல சவால்களை வெற்றிகண்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களுக்கு வெற்றிகளை ஈட்டித் தருவது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதில் தனியார் துறையினருக்கு பெரும் பங்களிப்பு உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நவீன தொழில்நுட்பத்துடன் நாட்டை முன்னோக்கிச் செலுத்த புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . பாடசாலை மாணவர்களின் கணனி அறிவை மேம்படுத்தி, நாடுமுழுவதும் இலவச வைபை வலயங்களை உருவாக்கப்போவதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் கூகுள் கிளவுட்ஸ் அமைப்பின் தலைவர் மோகீப் பான்டே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.