• Sat. Oct 11th, 2025

ரோகிங்ய அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம் – சாகலவிடம் ரிஷாட் முறையீடு

Byadmin

Sep 26, 2017
கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த அவலைகளின்  பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் சாகல ரட்நாயக்கவை இன்று (26.09.2017) காலை அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்கிசையில் இடம்பெற்ற இந்த மிலேச்சத்தனமான சம்பவங்களை விபரித்ததுடன், அது தொடர்பிலான காணொளியையும் அவரிடம் காட்டினார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை கடல் வழியாக படகுகளில் சென்றுகொண்டிருந்த மியன்மார் அகதிகளை இலங்கைக் கடற்படை கைதுசெய்து யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸில் ஒப்படைத்தது.  பின்னர் அவர்கள் விடுதலைசெய்யப்பட்டு ஐ.நா அதிகாரிகளின் பராமரிப்பில் கல்கிசைக்கு கொண்டுவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இவ்வாறு தஞ்சமடைந்திருந்த  அகதிகளையே இன்று காலை அந்தப் பிரதேசத்திற்கு சென்ற பௌத்த பிக்குகள் அடங்கிய இனவாதிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.  சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி அமைதியை பேணவேண்டிய பொலிஸாரும் இதற்கு  உடந்தையாக இருந்தமை, வேதனையானது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகலவிடம் சுட்டிக்காட்டினார்.
இனவாதிகள் ஐ.நா உயர் அதிகாரிகளையும் அச்சுறுத்தியிருக்கின்றனர்.  ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தைக்கூட புறக்கணித்து, தான்தோன்றித்தனமாக இனவாதிகள் செயற்பட்டமை, கேவலமானதெனவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் அமைச்சர் சாகல ரட்நாயக்கா பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மியன்மார் அகதிகளுக்கு எவ்வித இடையூறுகளும் வழங்கவேண்டாம் எனப் பணிப்புரை விடுத்ததுடன் அமைச்சரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *