• Sat. Oct 11th, 2025

மன்னாரில் அனர்த்தத்திலிருந்து காப்பாற்றப்பட்ட கிராமம்!

Byadmin

Dec 1, 2024

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 812 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 681 நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (1) வரை 28 நலன்புரி நிலையங்களில் வசித்து வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் நேற்று சனிக்கிழமை (30) வரை மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 19 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 334 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 263 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் 69 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் படிப்படியாக வெள்ளம் குறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளுக்குச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(1) மதியம் வரை 28 நலன்புரி நிலையங்களில் 812 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 681 நபர்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் தற்போது வரை 3 ஆயிரத்து 796 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 57 நபர்கள் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வசித்து வருவதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக பாரிய அனர்த்தத்தில் இருந்து அக்கிராமத்தில் இருந்து வீடு ஒன்றும் , வீதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மடுக்கரை கிராமத்தில் இரு குளங்களில் இருந்து வான் ஊடாக வெளிவந்த நீர் மடுக்கரை கிராமத்தில் இருந்த வீடு ஒன்றின் ஊடாக ஊடறுத்து சென்ற நிலையில் குறித்த வீட்டில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டு வீடு இடிபாடுகளுக்கு உள்ளாகியது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தலைமையிலான குழுவினர் விரைந்து செயல்பட்டு, நீர் வரத்தை முற்றாக தடுத்ததன் காரணமாக குறித்த அனர்த்தத்தில் இருந்து மடுக்கரை கிராமமும், குறித்த வீடும் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *