• Sun. Oct 12th, 2025

’வறுமையை சரியாக மதிப்பீடு செய்யவும்’

Byadmin

Mar 6, 2025

அரசாங்கம் முதலில் நாட்டின் வறுமைக் கோட்டை மிகச் சரியாகக் கணக்கிட வேண்டும். இவ்வாறு கணக்கிடாமை பிரச்சினையாக இருந்து வருகின்றது. இதன் மூலம் உண்மையான ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கையை தீர்மானித்துக் கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, சமூகப் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு சார் குழுநிலை விவாதம் இடம்பெறும் இந்த சந்தர்ப்பத்தில், சமூக வலுவூட்டல் தொடர்பான சரியான தரவுகள் மற்றும் குறிகாட்டிகளைப் புரிந்து கொள்ளாமல், தற்போதைய அரசாங்கம் வறுமையை ஒழிப்பதாகப் பேசுவதானது மிகவும் வேடிக்கையான விடயமாகும்.

ஜனாதிபதி கூட உலக வங்கி அறிக்கைகளையே பயன்படுத்துகிறார். ஆனால், வீட்டு அலகு ஒன்றின் வருமானம் மற்றும் செலவினம், உணவு மற்றும் உணவு அல்லாத செலவினங்கள் தொடர்பில் முதலில் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதனையே அரசாங்கம் ஆரம்பமாக செய்ய வேண்டும்.

ஜனாதிபதியின் வரவு-செலவுத் திட்ட உரையில் வறுமை 25.9 சதவீதம் என்று கூறப்படுகிறது. 2024 முன்னேற்ற அறிக்கையின்படி, 2025 முதல் 2029 வரையிலான 5 ஆண்டுகளில் பல் பரிமாண வறுமையை எதிர்நோக்கும் 2 மில்லியன் குடும்பங்களை வலுவூட்டுவோம் என்று கூறப்பட்டுள்ளது. 2 மில்லியன் குடும்பங்களை வலுவூட்டுவது சிறந்த விடயம்.

இது நாட்டின் மொத்த வறுமைச் சுட்டியின் பிரகாரம் அமையவில்லை. உலக வங்கி அறிக்கையின்படி 2023 இல் 56 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர். புள்ளி விபரங்கள் கூட துல்லியமாக தெரியாமல் வறுமையை ஒழிக்க முடியாது.

அத்துடன், ‘அஸ்வெசும’ ‘உதவித் தொகையை மட்டும் வழங்குவதன் மூலம் இந்த வறுமையை ஒழிக்க முடியாது. இதற்கு சேமிப்பு, முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி, நுகர்வு என்பன நடக்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களில் இங்கு பணம் வழங்கப்பட்டு நுகர்வு மட்டுமே நடக்கிறது. இவ்வாறு வறுமையை ஒழிக்க முடியாது. வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலைத் திட்டம் இந்த அரசாங்கத்திடம் இல்லை. ‘ஜனசவிய’ மற்றும் ‘சமுர்த்தி’ வேலைத் திட்டங்களில் இருந்து பாடம் கற்று, முறையான வறுமை ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *