• Sat. Oct 11th, 2025

இரட்டைக் குழந்தை பிறந்து விட்டதா..? கவலையை விடுங்க.. எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா..?

Byadmin

Sep 6, 2025

இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும் அதனை கையாளும் பக்குவத்தை இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவேண்டும். கருவில் இருக்கும்போதே இரட்டைக் குழந்தைகள் பிறப்பது உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்பதால் அப்போதே திட்டமிடலை தொடங்கிவிட வேண்டும்.

* குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகும் வரை குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் துணி மாற்றுவது முதல் தாய்ப்பால் கொடுத்து தூங்க வைப்பது வரை இரட்டை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


* பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். அதுவும் இரட்டைக்குழந்தைகள் என்றால் ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இரட்டையர்கள் தோற்றத்தில் வேண்டுமானால் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அணுகுமுறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை.

* இருவரும் ஒன்று போலவே, ஒரே மாதிரியான குணாதிசயத்துடன் வளர வேண்டிய அவசியமில்லை. இருவருமே மாறுபட்ட ஆளுமைத் திறனைக் கொண்டிருப்பார்கள்.


* ஒரு குழந்தை மற்ற குழந்தையைவிட துடிப்புடன் செயல்படலாம். எந்தவொரு விஷயத்தையும் சட்டென்று புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கலாம். வளரும் விதத்திலும் மாறுபடலாம். இதை எல்லாம் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொருவிதமான தனித்துவம் உள்ளடங்கி இருக்கும். அதனால் இருவரையும் வேறு, வேறு நபராகவே அணுக வேண்டும். இருவருக்குமான விருப்பு, வெறுப்புகளை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.


* ஒரு குழந்தை அமைதியாகவும், மற்றொரு குழந்தை படுசுட்டியாகவும் இருக்கும். ஒரு குழந்தைக்கு இனிப்பு பிடிக்கும் என்றால் மற்றொரு குழந்தை காரத்தை விரும்பும். ஒரு குழந்தை ஊட்டி விட்டால்தான் சாப்பிடும் என்றால் மற்றொரு குழந்தை தானாகவே சாப்பிடவிரும்பும். இருவரும் ஒற்றுமையாக விளையாட மாட்டார்கள். ஒரு குழந்தையின் கையில் இருக்கும் பொருள் மற்ற குழந்தைக்கு பிடிக்கும். அதனை பிடுங்கி, இன்னொரு குழந்தையை அழ வைக்கும். அதே பொருளை இருவருக்கும் கொடுத்தாலும் ஒருவரிடமே இரு பொருளும் இருக்க வேண்டும் என்று விரும்பும். அதனால் இருவருக்கும் இடையே ஓயாமல் சண்டை நடந்து கொண்டிருக்கும். அந்த சமயத்தில் பெற்றோர் பொறுமையை கையாள வேண்டியது அவசியம். இரண்டிடமும் அன்பாக அணுகவேண்டும்.

* எல்லா விஷயங்களையும் ஒரே நேரத்தில் இரு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். இரண்டு பேரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும்.

* எப்போதும் ஒரே குழந்தையை கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தால், மற்ற குழந்தை மனதில் அது ஏக்கமாக மாறிவிடும். அதனால் அது பெற்றோரிடம் நெருங்கி வருவதற்கு வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட தொடங்கிவிடும். இன்னொரு குழந்தையுடன் அடிக்கடி சண்டை போடவும் ஆரம்பித்துவிடும்.


* ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அது குழந்தைகளிடத்தில் பகையை உருவாக்கிவிடும். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

* ஒரு குழந்தைக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் மற்றொரு குழந்தைக்கும் பரவிவிடும். அதனால் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட வேண்டும். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இருவரும் பயன்படுத்தும் பொருட்கள், சாப்பிடும் உணவு போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


* இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனதில் எப்போதும் உற்சாகம் வெளிப்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மற்றவர்களின் உதவி தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் கேட்க வேண்டும். குழந்தைகளை கவனிக்கும் அனைத்து வேலைகளையும் தாயே செய்தால் அவருக்கு மன அழுத்தமும், உடல் சோர்வும் தோன்றிவிடும். இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களின் மனதுக்கும்- உடலுக்கும் ஓய்வு மிக அவசியம்.

* இரண்டு குழந்தைகளும் செய்யும் குறும்புகளை ரசிக்க வேண்டும். அது இரட்டைக் குழந்தை வளர்ப்புக்கான பாரத்தை குறைத்துவிடும். மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.


* குழந்தை வளர்ப்பில் கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் சம அளவில் இருக்க வேண்டும். அதிலும் கணவர், மனைவிக்கு தாமாகவே உதவிகளை செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் இரட்டை குழந்தைகளை சுமுகமாக வளர்க்க முடியும்.

* இரு குழந்தைகளின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்ற வேண்டும். அதில் பாகுபாடு காண்பிக்கக்கூடாது. இருவரிடமும் ஒரே மாதிரியான திறமைகளை எதிர்பார்க்கக்கூடாது. இருவரும் வெவ்வேறு விஷயங்களில் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அதை கண்டறிந்து, ஊக்குவித்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *