ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக, தொழிநுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தலா மூன்று இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க ஹோமாகம நீதவான் ராஜீந்திரா ஜெயசூரிய புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளார்.
ஹோமாகம தலைமையகப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்ததாலும், மாலை 6 மணிக்குப் பிறகு பல்கலைக்கழகத்தில் சுற்றித் திரிந்ததாலும், மாற்றுப் பெயர் பயன்படுத்தாததாலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.